முச்சக்கர வண்டி சாரதியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த பொலிஸார்
தெமட்டகொட பொலிஸார் முச்சக்கர வண்டிசாரதி ஒருவரை தடுத்துவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சட்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
தெமட்டகொட பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படு த்தாமல் 7 நாட்கள் தடுத்துவைத்திருந்தனர். அதுமட்டுமல்லாது அவரை நிர்வாணப்படுத்தி தாக்கினார்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சினிமாபாணியில் அச்சுறுத்தல்
தனது கட்சிக்காரரான முச்சக்கர வண்டி சாரதி தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பயணி ஒருவரை ஏற்றுவதற்காக தெமட்டகொடவிற்கு சென்றார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு சீருடையின்றி வந்தசிலர் துப்பாக்கியை காண்பித்து அவரை அச்சுறுத்தினார்கள்,பின்னர் அவரை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று, குப்பையொன்றில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து விசாரணை செய்தார்கள் மோசமாக தாக்கினார்கள் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதியை 9ம் திகதியே பொலிஸார் அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
தாம் தாக்கியதை மறைத்து முச்சக்கரவண்டி சாரதி வாகனமொன்றிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என பொய்யான தகவலை வழங்கியுள்ளனர். பொலிஸாரின் தகவலை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 18 ம் திகதிவரை சிகிச்சை பெற்றுள்ளார். தங்களிற்கு எதிராக முறைப்பாடு செய்தால் அந்த நபரின் வாகனத்தில் போதைப்பொருளை வைத்துவிட்டு குற்றச்சாட்டை பதிவு செய்வோம் என பொலிஸார் எச்சரித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது சகோதரரனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்டவரின் சகோதரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.