போதைப்பொருள் சோதனையில் தாக்கப்பட்ட பொலிஸார் ; பாதுகாப்பு அமைச்சரின் தகவல்
தெரணியகல பகுதியில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, விசேட விசாரணைப் பிரிவின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தெரணியகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல்
இரகசிய தகவலின் அடிப்படையில், ஹம்பானவெல பகுதியில் சிவில் உடையில் போதைப்பொருள் சோதனையில் சந்தேகநபர்களை கைது செய்ய முயன்ற வேளையில், அங்கிருந்த சிலர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த 4 பொலிஸார் சிகிச்சைக்காக அவிசாவளை மற்றும் தெரணியகலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.