சமூக ஊடகங்களில் பகிரப்பட்டும் காணொளி ; காவல்துறை உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நபரொருவர் தாக்கப்படும் காணொளியுடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கும், நபரொருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தையடுத்து, குறித்த நபரை காவல்துறை உத்தியோகத்தர் தாக்கும் காணொளியொன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
கொக்கரெல்ல, இப்பாகமுவ - மடகல்ல வீதியில் கடந்த 24 ஆம் திகதி இரவு, அதிக வேகத்தில் உந்துருளியொன்றை செலுத்திய நபரொருவரை காவல்துறையினர் சோதனையிட்டபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குருணாகல் மாவட்ட காவல்துறை அத்தியட்சகரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய கொக்கரெல்ல காவல்நிலையத்தின் சார்ஜன்டான குறித்த காவல்துறை உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.