போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்
சிறைச்சாலைக்குள் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு கையடக்கத் தொலைபேசிகளை கடத்த உதவிய குற்றச்சாட்டில், காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிங்வத்தை காவல்துறை நிலையத்தில் நீதிமன்றக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தண்டனைக்குள்ளாகியுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள "துபாய் கயான்" என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா ஒருவருக்காகவே இந்தத் தொலைபேசிக் கடத்தல் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரின் மலக்குடலில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை மறைத்து வைத்து சிறைக்குள் கடத்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்கு உடந்தையாக இருந்த சார்ஜன்ட், வாதுவையைச் சேர்ந்த கடத்தல்காரரின் நெருங்கிய சகாவிடம் இருந்து ஒரு தொலைபேசிக்கு 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 10,000 ரூபாயைக் கையூட்டலாகப் பெற்றுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், பிங்வத்தை காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேக நபரிடமிருந்து இரண்டு தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
விசாரணையின் போது, சார்ஜன்ட்டின் தலையீடு மற்றும் கையூட்டல் விவகாரத்தை சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த சார்ஜன்ட், ஏற்கனவே களுத்துறை தெற்கு காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய போதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாணந்துறை காவல்துறைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.