பொலிஸ் உத்தியோகத்தரின் அடாவடித்தனம் ; நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியிருந்தார்.
அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்வரும் 16.08.2025 திகதி சனிக்கிழமை ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட மக்கள்மீது பொய் குற்றங்களைப் பதிவுசெய்வது, மக்கள் மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.