நீர்த்தாங்கியிருலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரி; மரணத்தில் சந்தேகம் வெளியிட்ட மகன்
கம்பளை வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபினாத் தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் தொற்றினால் பீடிக்கப்பட்டு பின்னர் குணமாகியிருந்த சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அதிகாரி காணாமல்போயிருந்தார் இது தொடர்பாக கம்பளை கொத்மலை பூண்டுலோயா பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தந்தையின் மரணம் தொடர்பில் அவரது மகன் கருத்து தெரிவிக்கையில், தனது தந்தைக்கு வீட்டிலோ அல்லது தொழில் புரிந்த இடத்திலோ தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சிறிதளவேனும் பிரச்சினைகள் இருக்கவில்லை என கூறினார்.
அவர் சந்தோஷமாகவே இருந்ததாகவும், இந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார் .
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக இரசாயன பரிசோதனைகளுக்காக சடலத்தின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர மற்றும், கம்பளை பிராந்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஸ்ரீயந்த பீரிஸ், உதவி பொலிஸ் பரிசோதகர் கமல் ஆரியவன்ச உட்பட அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.


