சட்டத்தரணியை பொலிஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் ; மேலதிக விசாரணை தொடர்பில் வெளியான தகவல்
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகள் ஊடாக மேலதிக விசாரணைகளை நடத்துமாறு கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி சட்டத்தரணி ஒருவரின் காரை வௌியேற்றிய போது நடந்த சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த பொலிஸ் அதிகாரியை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சம்பவத்தின் போது சட்டத்தரணியுடன் சென்ற மற்றொரு சிரேஸ்ட சட்டத்தரணி குறித்த பொலிஸ் அதிகாரியை வாய்மொழியாக திட்டி, மிரட்டி, கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.