மதுபோதையில் இரு பெண்களை மோதிய பொலிஸ் அதிகாரி கைது
ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் காரைச் செலுத்தி இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, நேற்று முன்தினம் (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையிலான காலப்பகுதியில், ஹைலெவல் வீதியில் உள்ள மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும், வட்டரக்க 20ஆம் கட்டை பகுதியிலும் அடுத்தடுத்து இந்த இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

விபத்துகளை ஏற்படுத்திய பின்னர் காரில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைப் பரிசோதனையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.