யாழில் அதிரடி சுற்றிவளைப்பு ; மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, அல்லைப்பிட்டி பகுதியில் வசிக்கும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் முறையே 5.2 கிராம் மற்றும் 5 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்லைப்பிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் தற்போது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டுச் சம்பவத்துடனும் கைது செய்யப்பட்ட இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, போதைப்பொருள் விநியோக வலையமைப்பு மற்றும் பிற குற்றச்செயல்களுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.