யாழில் இலஞ்சம் பெற்று மது அருந்தும் பொலிஸ் புலனாய்வாளர்கள்; குடித்து விட்டு கூத்தடிப்பு
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் , சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினை பகுதிக்கு இலஞ்சம் பெறுவதுடன் குடித்து விட்டு கூத்தடிப்பதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் புலனாய்வாளர்கள் தொடர்பில் பிஅரதேச வாசிகள் மேலும் கூறுகையில், BCN – 6978 என்ற மோட்டார் சைக்கிளில் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் தினமும் எமது ஊருக்கு வருகின்றனர்.
அட்டூழியம் செய்யும் பொலிஸ் புலனாய்வாளர்கள்
இதன்போது வீதியில் செல்பவர்களையும், பத்திரிகை வாசித்துக் கொண்டு இருப்பவர்களையும் கைது செய்து கொண்டுபோய் கசிப்பு வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
எமது ஊரில் மரத்துக்கு கீழ் இருந்து குறித்த இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்களும் மதுபானம் அருந்திவிட்டு மதுபோதையிலேயே வீதியில் சென்று இவ்வாறு அட்டகாசம் புரிகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோட்டத்தில் நின்ற இளைஞன் ஒருவரை அவர்கள் கைது செய்து அழைத்துச் செல்ல முயற்சித்தவேளை இளைஞனின் உறவினர்கள் பொலிஸாருடன் முரண்பட்டதை அடுத்து இளைஞன் தலைக்கவசம் அணியவில்லை என விடயத்தை மாற்றி பேசினர்.
சிவில் உடையில், வேறு பொலிஸ் பிரிவுக்கு வந்த பொலிஸ் புலனாய்வாளர்கள் தலைக்கவசம் இல்லாததற்கு எப்படி கைது செய்ய முடியும் என முரண்பட்டபோது இளைஞனை விட்டுவிட்டு சென்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நேற்றுமுன்தினமும் எமது ஊருக்கு வந்து இவ்வாறு அட்டகாசம் செய்தவேளை பிரதேசவாசிகள் அவர்களை மடக்கி பிடித்து வைத்திருந்தவேளை சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்களையும் எச்சரித்துவிட்டு அனுப்பினர்.
அதுமட்டுமல்லாது வீடு ஒன்றிற்கு சென்று மரக்கறிகளையும் இலஞ்சமாக பெறுகின்றனர்.
ஜனாதிபதி அநுர அரசாங்கம் இலஞ்ச ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் பொலிஸாரின் இவ்வாறான அராஜகங்கள் எல்லை மீறி செல்கின்றதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆதாரபூர்வமாக நிரூபித்தாலும், பொலிஸாருக்கு , தண்டனை இடமாற்றம் அல்லது வேறு ஏதாவது சாதாரண தண்டனையே வழங்கப்படுகிறதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.