இலங்கை மக்களுக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முற்றாக ஒழித்து, குற்றவாளிகள் மீண்டும் தலை தூக்க முடியாதவாறு தடுப்பதே பொலிஸாரின் பிரதான நோக்கம் என்றும், இதற்குப் பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இரத்தினபுரி பகுததியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு போதைப்பொருள் முற்றுகைகள் மற்றும் குற்றக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குற்றச் செயல்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது சமுதாயத்தில் நிலவும் போதைப்பொருள் பரவல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவை முதன்மைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், பொதுவான குற்றச் செயல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் ஆகியவை பொலிஸாருக்கு மிகப்பெரிய சவால்களாகவும் பிரதான அச்சுறுத்தல்களாகவும் விளங்குகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், பொதுமக்கள் பொலிஸாரிடம் மிக முக்கியமான கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, போதைப்பொருள் வியாபாரிகள் இடமிருந்தும், கடத்தல்காரர்களிடம் இருந்தும் தங்களைக் காப்பாற்றுமாறும், குற்றவாளிகளிடமிருந்து தங்களது பிள்ளைகளையும் தங்களது உடைமைகளையும் பாதுகாத்துத் தருமாறும் பொதுமக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த நியாயமான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில், பொலிஸ் திணைக்களம் மக்களுக்கு உரிய மற்றும் எதிர்பார்க்கப்படும் சேவையை முழுமையாக வழங்கக் கடமைப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மீண்டும் தலைதூக்க முடியாதவாறு தடுக்கவும், போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாக்கவும் பொதுமக்களும் பொலிஸாரும் 'மரமும் பட்டையும் போல' இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் சேவையையும் வழங்க பொலிஸார் உறுதியளித்துள்ளனர். அதற்கான தீவர நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.