இலங்கை வந்த இரு வெளிநாட்டுப் வணிக நிறுவன ஊழியர்கள் அதிரடி கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பசுமை வழித்தடத்தின் (Green Channel) ஊடாகச் சென்றுகொண்டிருந்த 38 மற்றும் 41 வயதுடைய இரு வெளிநாட்டுப் பிரஜைகளும் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விசாரணை
குறித்த இருவரும் வணிக நிறுவன ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், AK 47 என்ற விமான சேவையின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, சுங்கத் திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தையும் அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.