கொழும்புக்கு செல்பவர்களை திருப்பியனுப்பும் பொலிஸார்!
கொழும்பில் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்தவுள்ள , ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்பவர்களை பொலிஸார் திருப்பியனுப்பவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டத்திற்கு செல்லும் மக்களை வழிமறிக்க பல இடங்களில் திடீரென சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் சோதனைச்சாவடிகளில் பயணிகள் பேருந்துகளை தவிர்ந்த பிற பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தில் கலந்து கொள்ள நொச்சியாகமவில் இருந்து மக்களை ஏற்றிச் செல்லும் பேரூந்துகளை பயணிக்க பொலிசார் அனுமதி மறுத்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த குழுவினர் நொச்சியாகம நகர மையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவிருந்த நிலையில் , உரிய அதிகாரியிடமிருந்து அனுமதி பெறாததால் சுகாதார சட்டத்திற்கு அமைய பஸ்களை பயணிக்க அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மககள் அநுராதபுரம் – புத்தளம் வீதியை மறித்து போக்குவரத்தை தடை செய்ததையடுத்து, வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகளை பொலிஸார் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் பொலிஸாருடன் கலந்துரையாடிய போதிலும், அவர்களை பேருந்துகளில் ஏறுவதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை.
இதன்போது போது பொலிசாருக்கும், குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் வீதி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கோஷங்களை எழுப்பிய பின்னர் , மாற்றுப் பாதையில் செல்வதாக கூறி பொதுமக்கள் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி
நாட்டின் பல பாகங்களில் திடீரென முளைத்த புதிய சோதனைச் சாவடிகள்!



