கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்
கொழும்பு 02, ஹுனுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை 02.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருகையில்,
ஆயுதத்தால் தாக்கி காயம்
பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது ஹுனுபிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபரொருவரை விசாரித்து அவரை சோதனையிட முயன்றுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.