இனி தாகாத வார்த்தைகளால் திட்டினால் இது தான் நடக்கும்...பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட முக்கிய தகவல்
மக்களுடன் கடமையாற்றும்போது தனிநபர்களைத் தகாத மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளால் திட்டும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கவனம் செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் தெரிவிக்கையில், எந்தவொரு நபரையும் தகாத வார்த்தைகளால் அழைப்பதற்கோ அல்லது திட்டுவதற்கோ பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அவ்வாறான செயற்பாடு ஒழுக்கமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

சிறந்த உறவு
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த உறவும் பரஸ்பர நம்பிக்கையும் நிலவ வேண்டும்.
எனினும், சில பொலிஸ் அதிகாரிகளின் முறையற்ற நடத்தைகள் காரணமாகப் பொலிஸ் திணைக்களத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண குடிமக்களின் சுயமரியாதையைப் பாதுகாப்பதுடன், பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தையும் நிலைநாட்டும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.