முறைப்பாடளிக்க சென்றவருக்கு பொலிஸார் நடத்திய கொடூரம் ; மாயமான பெருந்தொகை பணம்
கிரியுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரொருவர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், குறித்த நபர் வைத்திருந்த பணத் தொகையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்து ஐந்து நாட்கள் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான தாக்குதல்
சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில்,
கடந்த 24ஆம் திகதி குறித்த நபர் தன்னுடைய முறைப்பாடு செய்வதற்காக கிரியுல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அவருடைய பணப் பையில் 30 ஆயிரம் ரூபா பணமும் இருந்துள்ளது. இந்தநிலையில், அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை போதைப் பொருள் வியாபாரி எனக் கூறி முறைப்பாட்டினையும் எடுக்காமல் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
தன்னை இத்தோடு கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். வலி தாங்கமுடியாது கத்திக் கூச்சலிட்ட பின்னர் தான் தன்னை வைத்தியசாலைக்கு பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வந்த சமயம் தன்னுடைய பணப் பையில் 30 ஆயிரம் ரூபா பணம் வைத்திருந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து அதில் இருந்து 25 ஆயிரம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாகவும் 5ஆயிரம் ரூபா பணம் மாத்திரமே மிகுதியாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
காரணமேயின்றி தான் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு நீதி கோரியும், காணாமல் போன தன்னுடைய பணத்தினை மீள தருமாறும் பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பின்னர் கிரியுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்று, அவருடைய மனைவியிடம் சமாதானம் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.