யாழ். சர்வதேச விமான நிலையம் ; அரசாங்க தரப்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம்.

அடுத்த கட்ட செயற்பாடுகள்
அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த அரசாங்கத்தில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
யாழ்ப்பாண விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவு படுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்.
அதே போல் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி பணிகளை விரிவு படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வரும் அதே வேளை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சுமார் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே வடக்கு மக்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் எமது அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசாங்கமாக செயல்படும் அதேவேளை அபிவிருத்தி பணிகளையும் தொடர்சியாக முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.