புதிய கட்சிகள் உதயத்தால் மொட்டுக் கட்சிக்கு பாதிப்பா? ரோஹித வெளியிட்ட தகவல்
நாட்டில் உதயமான புதிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எமது பயணம் தொடரும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” கட்சி ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயம். அதனை யாரும் செய்யலாம்.
ஆனால் கட்சிக்கான பரந்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதே சவாலுக்குரிய விடயம். அந்த கட்டமைப்பை எமது மொட்டு கட்சி செய்துள்ளது.
மேலும், புதிய கட்சியை – கூட்டணியை ஆரம்பிப்பவர்கள் தேசிய தேர்தலொன்றின்போது பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆகவேண்டும். எனவே, தவறான வழியில் சென்றவர்கள் மீள வரலாம். எமது சலூன் கதவு திறந்தே உள்ளது.” – என்றார்.