அலரி மாளிகை அருகே திடீர் தீ: ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு
கொழும்பில் அலரி மாளிகை அருகே அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது, அரசாங்க ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில், இன்று (09-05-2022) இரவு மீண்டும் பொது மக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்த நிலையில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில், அலரி மாளிகையின் பாதுகாப்பில் இராணுவத்தின் விஷேட படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அலரி மாளிகையின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ச்சியாக ட்ரோன் கமராக்கள் மூலம் பாதுகாப்பு தரப்பு போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க இன்றிரவு ஆரம்பித்தது.
இதேவேளை, அலரி மாளிகையின் பின் பக்க நுழைவாயில் அருகே திடீர் தீ ஒன்றினை அவதானிக்க முடிந்தது. போராட்டக்காரர்களால் அந்த தீ வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பட்டும் நிலையில் அதனை அனைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.