ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை; தவிக்கும் 42 பயணிகள்
சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் குறித்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆர்.டி.பிசிஆர் சோதனை செய்து அதற்கான சான்றிதழ் தங்களிடம் இருந்தும், ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் அனுமதிப்போம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்கள் கூறிவிட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பயணி கூறுகையில்,
நான் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.20,000 கொடுத்து டிக்கெட் பதிவு செய்திருந்தேன். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது ரேபிட் டெஸ்ட் கட்டாயம் என்ற தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அந்த சோதனை கட்டாயம் என்றால் அது குறித்த தகவலை டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே எங்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கலாம் என விசனம் வெளியிட்டார். திடீரென ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் ஏற்றுவோம் எனக் கூறி என்னுடன் சேர்த்து 42 பயணிகளை தவிக்கவிட்டு விட்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
ரேபிட் டெஸ்ட் சோதனையை பொறுத்தவரை 6 மணி நேரம் தான் அதற்கு மதிப்பு, நாங்கள் இங்கிருந்து கொழும்பு சென்று அதற்கு பிறகு துபாய் செல்வதற்குள் 6 மணி நேரத்துக்கும் மேலாகிவிடும்.
இது குறித்து எவ்வளவோ எடுத்துக்கூறியும் எங்களை விமானத்திற்குள் அனுமதிக்கவில்லை.'' ''கட்டிட வேலைக்கு செல்வோர் முதல் தொழில் நிமித்தமாக செல்வோர் வரை 42 பேர் இப்போது சென்னை விமானத்தில் இருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.
இங்குள்ள எந்த அதிகாரியும் உருப்படியாக பதில் அளிக்கவில்லை. எங்கள் டிக்கெட் கட்டணத்தை ஏஜெண்ட்கள் எப்படியும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் 42 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் என எனக்குத் தெரியாது, எங்களை துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு தான் உள்ளது.
'' இதனிடையே இதே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் இருந்து துபாய்க்கு பயணிகளை அழைத்துச் சென்ற போது அங்கு பயணிகளிடம் ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் கேட்கவில்லை எனவும் கூறிய குறித்த பயணி, கேரள பயணிகளுக்கு ஒரு நியாயம், தமிழக பயணிகளுக்கு ஒரு நியாயம் என்ற வகையில் செயல்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
