திட்டமிட்ட ரயில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் உறுதி
தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் பதவி குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் கிடைக்கப்பெறாததால், முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு இலங்கை ரயில்வே சேவையில் செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்களின் இணை அழைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர இன்றைய தினம் (14) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.
இன்று போக்குவரத்து அமைச்சு வளாகத்தில், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது ரயில்வே திணைக்களத்திற்குள் எழுந்துள்ள நிர்வாக மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், பயணிகள் எதிர்கொண்டுள்ள சேவை முடக்கங்கள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் விரிவாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் நிர்வாகத்தின் மீது தொழிற்சங்கங்களுக்கு உள்ள நம்பிக்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதால், அவரை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தியுள்ளனர்.
ரயில்வே திணைக்களத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, திறமையான சேவையை நிறுவுவது மற்றும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரே நோக்கம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ரயில்வே திணைக்களத்தைக் கட்டியெழுப்புவதே தொழிற்சங்கங்களின் உண்மையான நோக்கம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளருக்கு விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியது சரியான செயலல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு மேலும் அவகாசம் தேவை என அமைச்சின் செயலாளர் இதன்போது அறிவித்துள்ளார்.
எனினும், கடந்த இரண்டு வருடங்களாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி தொழிற்சங்கங்கள் அந்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, வேலைநிறுத்தத்தைக் கைவிடுவது அல்லது இரத்து செய்வது தொடர்பில் எவ்வித உடன்பாடும் இன்றி கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதால், செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் மேலும் அறிவித்துள்ளன.