வீட்டின் கூரையில் ஏறிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக வீட்டின் வரவேற்பறைக் கூரையிலிருந்து மழைநீர் கசிந்துள்ளது. இதனைப் பரிசோதிப்பதற்காக குறித்த நடுத்தர வயது பெண் ஏணியைப் பயன்படுத்தி கூரைப் பகுதியைச் சென்று பார்த்துள்ளார்.

இதன்போது, கூரையில் சேதமடைந்திருந்த பகுதிக்கு அருகே விளாம்பழம் போன்ற வடிவில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதை அவர் அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்துத் தனது உறவினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் அளுத்கம காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குழுவினர் சோதனையிட்டதில் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அளுத்கம காவல்நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.