பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு ; லண்டன் சகாவிற்கு பிடியாணை
மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 3 பேரின் விளக்கம்றியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை
கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, பிள்ளையான் காணொளி தொழிநுட்பம் ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், லண்டனில் தலைமறைவாக உள்ள 'பொலிஸ் பாய்ஸ்' என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.