பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடு!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சாபக்கேடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.
நாமல் ராஜபக்சவின் மட்டக்களப்பு விஜயம்
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தனது கட்சி மாநாட்டுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவை மட்டக்களப்புக்கு அழைத்து வரவேற்பளித்துள்ளார்.
அதேவேளை தனது சொந்த மாவட்டத்துக்குச் செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ச உள்ளார். அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்சவை மேடையில் ஏற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களைத் தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனைச் சபையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூடக் கிடைத்திருக்காது என்றும், கல்முனை பிரதேச செயலகப் பிரிவு குறித்து விரிவுபடுத்தப்பட்ட பேச்சை முன்னெடுப்போம் எனவும் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.