பிள்ளையானின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது ; உதய கம்மன்பில சூளுரை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் வெளியில் தெரிவிப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் கம்மன்பில கூறினார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் 14 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் காரணமாகவே, அதிபாதுகாப்பு வலயமாகக் கருதப்படும் வெலிசர கடற்படை முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிள்ளையானின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அவருக்காக தாம் தொடர்ந்தும் குரல் கொடுப்பதுடன் அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர்வதற்குப் பதிலாக யாரையாவது பலிகடாவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.