பௌர்ணமியில் பாதயாத்திரை சென்று திரும்பிய தொழிலதிபருக்கு வீட்டிற்குள் காத்திருந்த ஷாக் ; கட்டுகட்டாக மீட்கப்பட்ட பணம்
மீகொட, உடகேவத்தை பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து 80 லட்சத்திற்கும் அதிகமான ரூபாயைத் திருடிய, அவரது பணியாளர் ஒருவர், 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகோடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெசாக் பௌர்ணமி விடுமுறையின் போது, சம்பந்தப்பட்ட அந்த தொழிலதிபர் தனது ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்ததோடு, தானும் தனது குடும்பத்துடன் கதிர்காம கோயிலுக்கு செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார்.

சிசிடிவி காட்சிகள்
வெசாக் பௌர்ணமியின் இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதாலும், பௌர்ணமிக்கு மறுநாள் பெறப்படவிருந்த ஒரு கொள்கலன் பொருட்களுக்குப் பணம் செலுத்த வேண்டியிருந்ததாலும், பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வசூலிக்கப்பட்ட பணத்தை வீட்டில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டிய பின்னர் புனித யாத்திரைக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இச்சந்தர்பத்தில் தொழிலதிபரின் ஊழியர்களும் விடுமுறைக்காக சென்றுள்ளதுடன் சந்தேகத்திற்குரிய அந்த ஊழியரும், தனது கிராமத்திற்குச் செல்வதாகக் கூறி அங்கிருந்து சென்றுள்ளார். தொழிலதிபரும் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்குறித்த சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பணத்தைத் திருடி சென்றுள்ளார்.
குறித்த சம்பவங்கள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டின் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறித்த சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர் தொடர்பிலும் தெரியவந்துள்ளது.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகோடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.