யாழில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ விபத்து ; பல நூறு லீற்றர் எரிபொருளுக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிக்குள் எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதன் காரணமாக அங்கிருந்த எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்றின் ஒரு பகுதி முற்றாக எரிந்து கருகியது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து செயற்பட்டனர்.
அவர்களின் துரித முயற்சியால் தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தின் போது பல நூறு லீற்றர் பெற்றோல் தீயில் எரிந்து வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.