5 இலட்சம் ரூபாய் சட்டச்செலவுடன் பிரித்தானிய பெண்ணின் மனு தள்ளுபடி
பிரித்தானிய பெண் கெய்லி பிரேசர், தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் 5இலட்சம் ரூபாய் சட்டச்செலவுடன் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கையில் இருந்து தம்மை நாடுகடத்துவதற்கு, அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை சவாலுக்கு உட்படுத்தி பிரித்தானிய பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.
பிரித்தானிய பெண் மீது குற்றம்
கடந்த ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின்போது, சமூக ஊடகங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஆவணப்படுத்தி வந்ததாக பிரித்தானிய பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தன்னிச்சையான முறையில்தம்மை நாடுகடத்தும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடகோரி, மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஆரம்பத்திலேயே நிராகரிக்க தீர்மானித்துள்ளது. சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதேவேளை முன்னதாக மருத்துவ வீசாவில் இலங்கை வந்திருந்த பிரேசர், விசா நிபந்தனைகளை மீறியதற்காக, 2022 ஓகஸ்ட் 15க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் கெய்லி பிரேசர் , அதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்திருந்தது.