கட்டுநாயக்காவில் பெண்ணுக்கு உதவிய நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
மத்திய நாடொன்றில் இருந்து கைக்குழந்தையுன் திரும்பிய பெண் ஒருவர், விமானத்தில் அறிமுகமான நபரிடம் 2 வயது மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் அறிமுகமான களுத்துறை போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
காலி உடுகமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விமானத்தில் அறிமுகம்
சம்பவம் குறித்து தெரியவருகையில், 11 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தொழில் புரிந்த குறித்த பெண், கடந்த 25 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
இந்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த போது விமானத்தில் 2 வயது பிள்ளையுடன் சந்தேக நபரான பெண் அறிமுகமாகியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர், களுத்துறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், தான் வந்த வாடகை வாகனத்தில் பெண்ணையும் பிள்ளையும் களுத்துறைக்கு அழைத்து வந்தாக முறைப்பாடடாளர் கூறியிருந்தார்.
எனினும் கட்டுநாயக்கவில் இருந்து களுத்துறை நகருக்கு வந்த பின்னர் குளிர்பானம் மற்றும் இனிப்புகளை வாங்கி வருவதாக கூறி, பிள்ளையை ஒப்படைத்து விட்டு வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற பெண் பல மணி நேரமாக திரும்பவில்லை.
பொலிஸில் முறைப்பாடு
இதனையடுத்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் பெண் தொடர்பில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை நடத்திய மாயமான பெண்ணை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சந்தேக நபரான பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதுடன், அவருக்கு பிள்ளைகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.