இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில்
மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படகு ஓட்டுநரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், கொழும்பு குற்றப் பிரிவினரால் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இஷாரா செவ்வந்தியை திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடு செய்த சந்தேகநபர், அவரை இந்தியாவில் இறக்கிவிட்ட பின்னர் படகில் பொருத்தப்பட்டிருந்த முக்கிய சாட்சியமான GPS கருவியை அழித்துள்ளதாகவும் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், இதே முறையைப் பயன்படுத்தி பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியுள்ளதாகவும், இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல 50,000 ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.