பாரவூர்தியில் இருந்து கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!
பதுளை - ஹல்துமுல்ல பகுதியில் பாரவூர்தியில் இருந்து கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து கண்ணாடி ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்று ஹல்துமுல்ல பகுதியில் உள்ள கட்டுமான பொருள் விற்பனை நிலையங்களுக்குக் கண்ணாடிகளை இறக்கிக் கொண்டிருந்த போது, 35 வயதுடைய நபர் மீது கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த நபரை உடனடியாக இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு, காவு வண்டியினூடாக ஹல்துமுல்ல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.