ஜனாதிபதி செயலகத்துக்கு அருகே கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவிரோதக் கூட்டமொன்றின் உறுப்பினர்களாகச் செயற்பட்டு, உரிய அனுமதிப்பத்திரமின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இவர்கள், நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட காலி முகத்திடல் வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில், இரவு மணியளவில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளுப்பிட்டி காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு 10, பஞ்சிகாவத்தை வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரும், ஹெலமட, ஹபுகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு ஒலிபெருக்கிகள், ஓர் ஒலிபெருக்கி பெருக்கி (Amplifier), கம்பியுடன் கூடிய ஒலிவாங்கி மற்றும் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய பாரவூர்தி ஆகியவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பாரவூர்தியில் அதிகளவிலான குடிநீர் போத்தல்களும் குடைகளும் வைக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.