மனைவியின் பதின்மவயது சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேற்ந்த கதி
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை 2015ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார்.
குறித்த சிறுமியை 2015 ஜனவரி 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் மாங்கேணி பிரதேசத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

வாழைச்சேனை பொலிஸாரால் வழக்கு தாக்கல்
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸாரால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் 2023இல் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டத்தரணிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி குறித்த நபர் நீதிமன்றில் குற்றவாளியாக ஆதாரங்களுடன் இனங்காணப்பட்டு, இன்றைய திகதியான ஒக்டோபர் 16 தண்டனைத் தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று தீர்ப்பினை அறிவித்தார்.