முல்லைத்தீவில் சத்தமில்லாமல் வழங்கிய அனுமதி; வெளியான தகவல்
முல்லைத்தீவு – புலிபாய்ந்த கல் கடற்கரையில் சிங்கள மீனவர்களுக்குத் தொழில்புரிய அனுமதி வழங்கும்படி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சத்தம் சந்தடியின்றி பணிப்புரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் குளத்து நீர் வற்றுக் காலத்தில் தங்களுக்குப் பாதிப்பு எனக் கூறி கடல் மீன்பிடிக்கு அனுமதி பெற முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.
இனமுறுகலை தோற்றுவிக்கும் செயல்
இந்நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கும் பணிப்புரைக் கடிதம் நேற்றுமுன்தினம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளரால் ஒப்பமிடப்பட்டு மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு கடிதத்தின் அதன் பிரதி வெலிஓயா கிராமப்புற மீனவர் அமைப்பின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வெலிஓயா கிராமப்புற மீனவர் அமைப்பினரே வெலிஓயாவில் உள்ள குளங்களின் வற்றுக் காலத்தில் அனுமதியின்றி அத்துமீறி தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட முயலுகின்றனர்.
அந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்கனவே தண்ணிமுறிப்புக் குளத்தில் அனுமதியுடன் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் அவர்களுடன் முரண்படும் நிலைமைகள் ஏற்படுகின்றன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் சிங்கள மீனவர்களுக்கு 15 மைல் தொலைவில் உள்ள தமிழ் மீனவர்களின் பிரதேசத்தில் கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டமை திட்டமிட்ட இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் என உள்ளூர் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்