யாழில் கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அசௌகரியம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் சில பகுதிகள் குப்பை மேடுகளாக மாறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகிலேயே சிலர் குப்பைகளை சரியான முறையின்றி ஒழுங்கில்லாமல் கொட்டுவதால், அந்த இடங்கள் தற்போது பாரிய குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.
மீன் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் அங்கு கொட்டப்படும் நிலைமை, துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு நோய்களை பரப்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டைக்காடு பகுதியில் வாழும் மக்கள் சிலர் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அதற்கு மேலாக, கிராம சேவகர், பிரதேச சபை அல்லது சுகாதார அதிகாரிகள் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது மக்களுக்கு அசௌகரியத்தை அதிகரித்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் சுகாதார அதிகாரிகள் நேரில் வந்து, இந் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், இத்தகைய அசௌகரிய நிலைகள் இல்லாமல் இருக்கலாம் என சுகாதார முறைகளை கடைப்பிடித்து வசிக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி தற்போது சமூகத்தில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.