NPPயின் அரசியலால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ; எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்
தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின்னேரியா, எலஹெர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம், மக்களை ஏமாற்றி, தான் சொல்வதைச் செய்யாத ஒரு பொய், வஞ்சக மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி, பால்மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
தேர்தல் மேடையில் பொய் மந்திரங்களை உச்சரித்ததால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ள நிலையில் மீண்டும் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றத் தயாராகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், மக்களின் எதிர்ப்பால் 20 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 13 சதவீதம் குறைத்திருக்கலாம். எரிபொருள் விலை குறித்தும் அரசாங்கம் இதே போன்ற விடயங்களைக் கூறியது.
கையூட்டல், ஊழல், திருட்டு போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயர்ந்ததாகவும், இன்னும் விலையைக் குறைக்காமல் மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.