விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது; சோதனையில் சிக்கிய பொருட்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இரவில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர்கள் ஆவார். சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம் மாலை 06.00 மணியளவில் டுபாயிலிருந்து 'எமிரேட்ஸ்' விமானச் சேவைக்குச் சொந்தமான EK-654 எனும் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 1,06,600 சிகரெட்டுகளைக் கொண்ட 533 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட இரு வர்த்தகர்களையும் சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.