75 அடி பள்ளத்தில் வீட்டின் மீது பாய்ந்த லொறி ; நால்வர் படுகாயம்
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மதித்தலே பகுதியில் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடு மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (12) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், லொறி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடொன்றின் மீது கவிழ்ந்ததில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த குறித்த லொறி, மலைப்பாதையில் பிரேக் செயலிழந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மோதிய லொறி, பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து, கீழே அமைந்திருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குடியிருப்பு வீடொன்றின் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில், குறித்த வீட்டில் இருந்த தந்தையும் மகனும், லொறியின் சாரதியும் உதவியாளரும் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.