பவித்ரா கூறியக் குட்டிக்கதையால் அதிருப்தியில் அரச தலைவர்கள்
பவித்ரா வன்னியராச்சி அவர்கள் கூறிய குட்டிக் கதையால் அரச தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் , சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்த கருத்துகள் , அரச உயர்மட்டத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த நிகழ்வில் அமைச்சர் பவித்ரா கூறிய குட்டிக்கதை , அரச தலைவர் ஒருவரை மறைமுகமாக சாடி குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அமைச்சரவை மாற்றமொன்று குறித்து தனக்கு தெரியாதென்றும் , தனது அமைச்சு மாறுமென ஒருபோதும் நினைக்கவில்லையென்றும் அமைச்சர் பவித்ரா இங்கு குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் கூறிய குட்டிக்கதை இதுதான்,
‘´ஒரு ஊரில் அரசரும் அவரின் புரோகிதரும் பயணமொன்று சென்றுகொண்டிருந்தார்களாம்… போகும் வழியில் கண்ட மான் ஒன்றினை நோக்கி தனது வில்லை எடுத்து அம்பை எய்தினாராம் அரசர்.. ‘ஏன் புரோகிதரே ஒருநாளும் இல்லாமல் குறி பிழைத்து விட்டது ?’ கேட்டாராம் அரசர்.. எல்லாம் நன்மைக்கே என்றாராம் அந்த புரோகிதர்… இன்னுமொரு நாள் அரசரின் வாளால் அவரது விரலே வெட்டுப்பட்டுவிட்டது .ஏன் இப்படி நடந்தது என்று புரோகிதரிடம் கேட்டாராம் அரசர் .
எல்லாம் நன்மைக்கே என்று அதற்கும் பதிலளித்தாராம் அந்த புரோகிதர்… இதனால் ஆத்திரமுற்ற அரசர் , புரோகிதரை குழியொன்றில் தள்ளிவிட்டு தனக்கு பிடித்த பாதையில் சென்றாராம்.. அப்போது காட்டுவாசிகள் பலர் அரசரை பிடித்துச் சென்று பலி கொடுக்க தயாராகினர்.
ஆனால் விரல் இல்லாத குறை அதாவது உடலில் குறை இருந்தபடியால் அவரை பலி கொடுக்க முடியாதென காட்டுவாசிகள் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். அட… புரோகிதர் கூறியபடியால் தானே உயிர்தப்பினேன் என நினைத்த அரசர் ஓடிச் சென்று புரோகிதரை குழியில் இருந்து மீட்டார்.
எல்லாம் நன்மைக்குத்தான் அரசரே என்று கூறிய புரோகிதர் , ‘ அன்று நான் இருந்திருந்தால் உடல் குறைபாடு இல்லாத காரணத்தினால் பலிகொடுக்கப்பட்டிருப்பேன்’ என்றும் குறிப்பிட்டாராம். அதனால் எதுவும் நன்மைக்கே என்று இருந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டார் அமைச்சர் பவித்ரா .
இதுவே அரச தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.