தமிழர் பகுதி பயணிகளை அலைக்கழித்த தனியார் பேருந்து; தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடு
பரந்தனில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று பயணிகளை அலைக்கழித்ததுடன், அனுமதியின்றி கூடுதல் கட்டணமும் வசூலித்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) வவுனியா காரியாலயத்தில் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பரந்தனில் இருந்து இன்று புறப்பட்ட NP 7487 இலக்கமுடைய குறித்த பேருந்து, காலை 09.20 மணியளவில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து தரித்து நின்றது.
அங்கிருந்து காலை 09.30 மணிக்கு வவுனியா நோக்கிப் பயணிக்க வேண்டிய பேருந்து, திட்டமிட்டபடி பயணிக்காமல் திடீரென மீண்டும் பரந்தன் நோக்கித் திரும்பிச் சென்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பரந்தனில் இருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி வழியாக வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்து, மதியம் 12.15 மணியளவிலேயே வவுனியாவை வந்தடைந்துள்ளது.
இதன் காரணமாக, காலை 09.30 மணிக்கே வவுனியாவை வந்தடைந்திருக்க வேண்டிய பயணிகள், சுமார் 2 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தாமதமாகவே தங்களது இலக்கை அடைந்துள்ளனர்.
இதனால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பேருந்துக் கட்டணச் சீட்டில் 300 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்த போதிலும், பயணிகளிடம் தலா 330 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் மேலதிகமாக 30 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணிகள், வவுனியாவில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு காரியாலயத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
பயண நேர அட்டவணையை மீறி செயற்பட்டதுடன், அனுமதியின்றி கூடுதல் கட்டணம் வசூலித்த குறித்த பேருந்து நிர்வாகத்திற்கு எதிராக உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.