மாஸ்க் போட சொன்ன விமானப் பணிப்பெண் முகத்தில் ஓங்கி அறைந்த பயணி!
மாஸ்க் அணிய சொன்ன விமானப் பணிப்பெண்ணை முகத்தில் அறைந்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. இதன்போது பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்று விமானப் பணியாளர்கள் அறிவிப்பு செய்ததை அடுத்து சில நிமிடங்களில் விமானம் பறக்கத் தொடங்கியது.
விமானம் பறந்துகொண்டிருந்தபோது பணிப்பெண் ஒருவர் பிசினஸ் கிளாசில் பயணித்த மாஸ்க் அணியாத பயணியை பார்த்து மாஸ்க் அணியுமாறு பணிவோடு சொன்னார். ஆனால், அந்தப் பயணி படாரென்று பணிப்பெண்ணின் முகத்தில் அறைந்துவிட்டார்.
இதை சற்றும் எதிர்பராத விமானப் பணிப்பெண் சுதாரிப்பதற்குள் அடுத்தும் ஒரு குத்துவிட்டதில் விமானப் பணிப்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அங்கிருந்து வெளியேற முயன்றவரை பயணிகள் பிடித்துக் கொண்டனர்.
பின்னர் டேப்பால் அவர் கைகளை இருக்கையில் கட்டிவிட்டு, இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக டென்வர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரமாக அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து விமானம் நின்றதும் அந்த பயணி கைது செய்யப்பட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.