எல்ல-வெல்லவாயவில் விபத்துக்குள்ளான பேருந்தின் பாகங்கள் ஆய்வுக்கு
பதுளை எல்ல-வெல்லவாய வீதியில் 1,000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து இன்று அதிகாலை பெரும் முயற்சியின் மூலம் மீட்கப்பட்டது.
பேருந்தின் சிதைவுற்ற பாகங்கள் இன்று காலை எல்ல காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனிடையே பேருந்தின் பாகங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட உள்ளன.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் அரோஷ வித்யாபூஷண உள்ளிட்ட குழுவினர் விபத்து நடந்த இடம் மற்றும் பேருந்தின் பாகனங்களை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்து 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிவிலிருந்து நீக்கப்பட்ட பேருந்து என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கூறுகிறார்.
அதன்படி, இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்து தொடர்பாக சரியான ஒழுங்குமுறைக்கு உட்பட்டதல்ல என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேசிய போக்குவரத்து ஆணையக்குழுவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் தரநிலைகள் சரிபார்க்கப்பட்டாலும், பொழுதுபோக்கு பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டங்களும் இல்லை என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.