கலாநிதிப் பட்டம் தொடர்பாக நாடாளுமன்றம் விளக்கம்
இலங்கை நாடாளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஊடக அறிக்கையொன்றின் மூலம் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறார்.
கலாநிதிப் பட்டம் உள்ளடக்கப்படவில்லை
அமைச்சரினால் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், நாடாளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறுதல் காரணமாக இது ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜயலத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.