கடைசி நிமிடங்களில் அவசரப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்!
இலங்கையில் நடந்துமுடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தற்போது தங்களது நிதிநிலை அறிக்கையை கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த (06-12-2024) வெள்ளிக்கிழமையுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், பிரசார நிதிச் சட்டங்களின்படி தமது நிதிநிலை அறிக்கையை அவர்கள் கையளித்துள்ளனர்.
இதன்படி, தேர்தலில் போட்டியிட்ட 8,800 வேட்பாளர்களில், 7,846 பேர் தங்கள் நிதிநிலை அறிக்கையை ஒப்படைத்துள்ளனர்.
தேர்தல் பிரசார நிதிச் சட்டக் காலக்கெடுவைக் கருத்திற்கொண்டு வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்க கடைசி நிமிடங்களில் அவசரப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளிக்கிழமைக்குள் 493 கட்சிகள் தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையக தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையகத்திடம் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக பொலிஸ் தரப்பு சட்ட நடவடிக்கை எடுக்கும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் கூறியுள்ளார்.