சக மாணவர் குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை ; பெற்றோர் அதிர்ச்சி
இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதே வகுப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் குருவிட்ட பொலிஸாரால் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்கள் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருவிட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளில், கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் குறித்த மாணவிக்கு எதிராக தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனைய மூன்று மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.