இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் உதவி ; ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.
இந்நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை மேம்படுத்தும் கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
இதில், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மத்திய கிழக்கு நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தொலைதூரத்தில் இடம்பெறும் மோதல்களின் தாக்கத்தினால் எந்தவொரு குடும்பமும் மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என ADB தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரித்தல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இச்சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் இலங்கையின் திறன் மேலும் வலுப்பெறும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு மோதலினால் அதிகரித்து வரும் செலவினங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை சமாளிக்கும் வகையில், இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு மொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் ADB தீர்மானித்துள்ளது.
இதன்படி, கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.