திங்கள் முதல் சந்தையில் பால்மா கிடைக்கும்; ஆனால் விலை அதிகரிக்கலாம்
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பால்மா தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
எனினும் தற்போது நீக்கப்பட்டுள்ள பால்மாவிற்கான இறக்குமதி வரி நிதியமைச்சினால் மீண்டும் அறவிடப்பட்டால் அதன் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் பால்மாவின் விற்பனை விலை அதிரிக்கப்பட்டதை தொடர்ந்து இறக்கமதி செய்யப்படும் பால்மாவின் விலையை தேசிய மட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து விற்பனை விலையை தீர்மானிக்கும் அதிகாரம் இறக்குமதியாளர் சங்கத்தினருக்கு உண்டு.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பெக்கட்டின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க கோரிக்கை விடுத்தோம். இவ்விடயம் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் வெள்ளியன்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது ஒரு கிலோகிராம் பால்மாவினை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவை 100 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்த விலை அதிகரிப்பும் திருப்தியற்றதாக உள்ளது. எனவே புதிய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் பால்மாவை விற்பனை செய்யும் போது 80 ரூபாவினாலும்,400 கிராம் பால்மாவை விற்பனை செய்யும் போது 32 ரூபாவினாலும் நஷ்டமடைகிறோம். ஆனால் பால்மாவிற்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதனை இதனை கருத்திற் கொண்டே பால்மாவின் விலை அதிகரிப்பை 140 ரூபாவினால் குறைத்துள்ளோம்.
விலையேற்றத்தை தொடர்ந்து மீண்டும் வரி அறவிடப்பட்டால் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்ட அவர் திங்கள் முதல் சந்தையில் பால்மா தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படும்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய விலைக்கு அமையவே அனைத்து விற்பனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Share