பாகிஸ்தானுக்கு கிடைத்த தாய் வீட்டு சீதனம் ; கொட்டிக்கிடக்கும் கோடி கணக்கான தங்கம்
பாகிஸ்தான், கடுமையான நிதிச்சிக்கலில் இருக்கும் சூழ்நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் சிந்து நதியின் படுகையில் மிகப்பெரிய அளவில் தங்கக் களஞ்சியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ.80,000 கோடி என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அரசு நடத்திய ஆய்வில் இந்த தங்கக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய் வீட்டு சீதனம்
பாகிஸ்தான் தேசிய பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் மேலாளர் ஜர்காம் இஷாக் கான் "அட்டோக் மாவட்டத்தில் உள்ள இந்துஸ் நதியின் கரையில் 9 தங்கப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கான பரிசீலனையும் ஏலத்திற்கான ஆவணங்களும் தயாராக உள்ளன." என தெரிவித்துள்ளார்.
சிந்து நதி, இந்தியாவின் இமயமலையிலிருந்துதான், தங்கத்தை சுமந்து பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. வெள்ளப் பெருக்கில் தங்கம் நதிக்கரைகளில் சேர்ந்து சிறிய துகள்களாக மற்றும் Placer Gold உருவாகிறது.
பல நூற்றாண்டுகளாக இந்த நதியின் மண், தங்கம் மற்றும் பிற கனிமங்களால் பண்பட்டுள்ளது.அதுதான் இப்போது பாகிஸ்தானுக்கு லாபமாக மாறியுள்ளது, என புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நெட்டிசன்கள் ”ஐயா, ஜின்னா, உங்களால் பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாகியது. ஆனால், இந்தியாவின் தங்கம் பாகிஸ்தானுக்கு பயன்படுகிறதே, இதுதான் தாய் வீட்டு சீதனமோ” என வேடிக்கையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.