குற்றங்களை ஒப்புக்கொண்ட பத்மே கெஹல்பத்தர ; வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டார்.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரை கொலை செய்வதற்கு தாமே திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன்.கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சி தொடர்பாகவும் அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அதன்போது, கம்பஹா ஒஸ்மனைக் கொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்தவின் வேண்டுகோளின் பேரில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து போதைப்பொருட்களையும் தாம் விற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனிடையே, துப்பாக்கிகள் தொடர்பான விசாரணையின் போது, இதுவரை தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும், தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதான இருப்பதாகவும் கெஹெல்பத்தர பத்மே கூறியுள்ளார். அந்த துப்பாக்கியை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது தந்தை கொல்லப்பட்ட பின்னரே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் இணைந்ததாகவும் கெஹெல்பத்தர பத்மே கூறியுள்ளார், எனினும், அவரது தந்தை கொல்லப்படுவதற்கு முன்பு பஸ் சமி என்ற நபரைக் கொன்றதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.
பழிவாங்கும் விதமாக கணேமுல்ல சஞ்சீவ, கெஹெல்பத்தர பத்மேவின் தந்தையைக் கொன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கெஹெல்பத்தர பத்மேவின் கைபேசியை ஆய்வு செய்தபோது பிரபலமான மென்பானமொன்றின் பெயரை குறியீட்டு சொல்லாக பயன்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர் அந்த மென்பானத்தின் பெயரை, கொக்கேய்ன் போதைப்பொருளை அடையாளப்படுத்துவதற்கு, பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.