அதிக விலைக்கு குடிநீர் விற்பனை, காலாவதியான குளிர்பானங்கள்; உரிமையாளருக்கு 2.6 இலட்சம் ரூபா அபராதம்
அதிகூடிய சில்லறை விலையை விடக் கூடுலாகக் குடிநீர்போத்தல்களை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளருக்கு 260 000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் அண்மையில் எல்ல பகுதியில் அமைந்துள்ள குறித்த ஹோட்டல் மற்றும் உணவகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குற்றச்சாட்டுகள்
இதன்போது 120 ரூபா அதிகூடிய சில்லறை விலை அச்சிடப்பட்டிருந்த ஒரு லீற்றர் குடிநீர்ப் போத்தல் 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 80 ரூபா கூடுதலாக அறவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 29, திகதி காலாவதியான ஆறு 400 மில்லி லீற்றர் குளிர்பான போத்தல்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தது. வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதிவாதிக்கு 260,000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வணிக நிறுவனங்கள் எப்போதும் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலைகளையே பின்பற்ற வேண்டும் என்றும், காலாவதி திகதிகளைத் தொடர்ந்து பரிசோதித்து அத்தகைய பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிகார சபை எச்சரித்துள்ளது.
அத்துடன், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை வாங்கும்போது பொதுமக்கள் அவற்றின் காலாவதித் திகதியைக் கட்டாயம் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கூடுதல் விலை ஈட்டுதல் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977 ஊடாக அலுவலக வேளைகளில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.